தரமற்ற கால்நடை தீவனங்கள் விநியோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

சென்னை 


 


ஈரோடு மாவட்ட ஆவின் ஒன்றியத்தில் இருந்து காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட கலப்புத் தீவனங்கள் பூஞ்சை பிடித்து போயிருப்பதும், பூஞ்சை பிடித்த தீவனங்களை காங்கேயம் கூட்டுறவு சங்கத்தில் இருந்து அப்படியே பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கியிருக்கும் தகவலும் அதிர்ச்சியளிக்கிறது.


ஏனெனில் "அப்லாடாக்சின் எம்-1" என்கிற நச்சுத்தன்மை கலந்த பால் தமிழகத்தில் தான் அதிகளவில் விற்பனையாகிறது என்றும், அப்லாடாக்சின் எம்-1 நச்சுத்தன்மை கலந்த பாலை குடிப்பதால் புற்றுநோய் வரும் என்கிற அதிர்ச்சி தகவலை கடந்த சில மாதங்களுக்கு முன் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆய்வறிக்கையாக வெளியிட்டது.


மேலும் அப்லாடாக்சின் எம்-1 என்கிற நச்சுத்தன்மையானது பூஞ்சை பிடித்த தீவனங்களை உண்ணும் கால்நடைகளில் இருந்து கறக்கப்படும் பாலில் தான் உருவாகிறது என்கிற தகவலை மருத்துவர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் பூஞ்சை பிடித்த கலப்புத் தீவனங்களை குப்பையில் கொட்டி அழிக்காமல் அப்படியே கூட்டுறவு சங்கங்களுக்கு விநியோகம் செய்து, அதனை பால் உற்பத்தியாளர்களுக்கு விற்பனை செய்திருப்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.


தரமற்ற கலப்புத் தீவனங்களால் கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்படும், அதன் மூலம் தரமற்ற பால் உற்பத்தியாகும் என்பதை தெரிந்தே செயல்பட்ட ஈரோடு மாவட்ட ஆவின் ஒன்றியம், காங்கேயம் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் தரமற்ற கால்நடை தீவனங்கள் தமிழகத்தில் வேறு எந்தெந்த ஒன்றியங்களுக்கு, கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து உடனடியாக அதனை திரும்ப பெற்று அழிப்பதோடு, கால்நடை தீவனங்களை நெகிழி கோணிப்பைகளில் அடைக்காமல் சாக்குப்பைகளில் அடைத்து விநியோகம் செய்திட சம்பந்தப்பட்ட கால்நடை தீவன உற்பத்தி நிறுவனங்களுக்கு உத்தரவிடுமாறும், தரமான மாட்டு தீவனங்களை பெற்று தரமான பால் உற்பத்தி நடைபெறுவதை உறுதி செய்திடுமாறும் தமிழக அரசை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.


Popular posts
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்திற்குட்பட்ட சந்தைதோப்பு பகுதியில் பழங்குடியினருக்கான மருத்துவ முகாம்
சேலம் மாநகராட்சி  கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள்  அனைத்து வகையான வரி இனங்களை செலுத்துவதற்கான  சிறப்பு முகாம் 
உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீட்டை அரசு முறையாக அறிவிக்கவில்லை- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் : இந்திய தேசிய லீக் வலியுறுத்தல்