திண்டுக்கல்
2019-2020ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி மானியக் கோரிக்கை அறிவிப்பையொட்டி வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் 21.02.2020 முதல் 27.02.2020 வரையிலான ஒரு வார காலத்திற்கு கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடுதல் தொடர்பாக வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வலியுறுத்தும் கூட்டமும், ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டமும் திண்டுக்கல்லில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, ஆட்சிமொழிச் சட்ட வார விழாவின் ஐந்தாம் நாள் நிகழ்வான 25.2.2020 அன்று “கணினித் தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம், அம்மா மென்தமிழ் - தமிழ்ச் சொல்லாளர்” ஒருங்குறி பயன்பாடு குறித்து அரசுப் பணியாளர்களுக்கான பயிற்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகம் வனச்சரக அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
ஆட்சிமொழிச் சட்ட வார விழாவின ஆறாம் நாள் நிகழ்வான 26.2.2020 அன்று ஆட்சிமொழி மின்காட்சியுரைப் பயிற்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகம் வனச்சரக அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. மேனாள் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் முனைவர் பெ.சந்திரா அவர்கள் அரசுப் பணியாளர்களுக்கு ஆட்சிமொழி மின்காட்சியுரைப் பயிற்சி அளித்தார்.
ஆட்சிமொழிச் சட்ட வார விழாவின் ஏழாம் நாள் நிகழ்வான 27.2.2020 அன்று தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகம் வனச்சரக அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. திண்டுக்கல்லைச் சேர்ந்த தமிழ்ச்செம்மல் மா.தமிழ்ப்பெரியசாமி, மேனாள் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் முனைவர் பெ.சந்திரா ஆகியோர் அரசுப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
இப்பயிற்சியில் அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள் ஆகியவற்றில் பணிபுரிகின்ற 50-க்கும் மேற்ப்பட்ட பணியாளர்கள் கலந்துகொண்டனர். பயிற்சியில் கலந்துகொண்ட அரசுப் பணியாளர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திரு.பெ.இளங்கோ உட்பட பலர் கலந்துகொண்டனர்.